Friday, 26 May 2023

மரபுகள் மாறும்

 மரபுகள் மாறும்


புதிய மரபுகள் உருவாகும்

காலம் நமக்களித்த கொடை

மாற்றம் எதுவுமின்றி

எதுவும் தொடர்ந்ததில்லை

அம்மணமாய் திரிந்தவர்கள்

ஆடை உடுத்து

புதிய மரபை உருவாக்கினர்

அலங்காரங்களும் அழகியலும்

தொடர்ந்தன

ஊமை மொழியிலிருந்து

உருவ மொழி உருவானது

கோட்டெழுத்துக்களிலிருந்து

அந்தந்த இடம் அமைவியல் சார்ந்து

தனித் தனியாய் எழுத்துப் பண்பாடு

உருவாகி உயர்ந்தது

வாய்மொழி இலக்கியங்களிலிருந்து

அடுத்த கட்டமாய்

எழுத்திலக்கியங்கள் உருப் பெற்று

காவியங்களாகி 

கலைத்துவ மொழியாய் உயர்ந்தன

வேட்டையாடும் போலச் செய்தலிலிருந்து

கலைகளின் ஊற்று களி நடம் கொண்டது

ஆடல் மொழி உருவானது

காலம் தந்த மாற்றங்கள் 

உள்வாங்கப்பட்டு தொடரும் நீட்சியில்

சங்க காலத் தமிழ் கூத்து

இன்றில்லை ஆனாலும் 

அதன் தொடர்ச்சியின் நீட்சியில்

தமிழகத் தெருக் கூத்தும்

அதன் வழி நீண்ட கூத்து மரபுகள்

மாற்றங்களினூடு உயிர் கொள்கின்றன

மாதவி ஆடிய ஆதே தமிழ் ஆடல் 

மரபு இன்றில்லை ஆனாலும்

அதன் தொடர்ச்சியில்

தமிழ் ஆடல் மரபு நீள்கிறது

தாசியாட்ட மரபாய்

சதிராட்ட மொழியாய் 

ஈழக் கூத்தும் அப்படித்தான் தன்

மூலக் கூறுகளிலிருந்து 

மாறுபட்டு மரபின் தொடர்ச்சியாய்

கால மாற்றங்களை உள் வாங்கி

உடையில் ஒப்பனையில்

ஆடலில் பாடலில் அசைவில்

புதிய மாற்றங்களுடன் பயணிக்கிறது

கச்சை கட்டினவன் இன்றும்

கச்சைதான் கட்ட வேண்டும்

எனும் வரட்டு வாதங்கள்

காலத்தை புறம் தள்ளும்

பிற்போக்கு சகதியுள்

அமிழ்ந்து போகும்

அவரவர் வழிகளில்

அவரவர் பயணம்


No comments:

Post a Comment