பேராசிரியர்.கா.சிவத்தம்பி- 91
இன்று பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் 91 ஆவது பிறந்த நாள்.
ஈழத்தின் தமிழ் கலை இலக்கிய விமர்சன உலகில் முற்போக்கு முகமாய் அறியப்பட்டவர் எங்கள் ஆசான் பேராசிரியர் கா .சிவத்தம்பி அவர்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைகழக தமிழ்த்துறைத் தலைவர்,கிழக்குப் பல்கலைக்கழக வருகை தரு பேராசிரியர்.தமிழ் நாட்டின் பல பல்கலைக்கழகங்களின் அழைப்புப் பேராசிரியர், என உயர் கல்விப் புலத்தில் தமிழ் ஆய்வு புதிய தளத்திலான திறனாய்வு என்பனவற்றில் தமிழின் மூல வேர்களிலிருந்து கண்டடைதல் எனும் கருத்துருவாக்கம் என தன் இறுதிக்காலம் வரை தமிழாய் தமிழியலாய் வாழ்ந்து மறைந்த தமிழ்க் கடல் அவர்.
தமிழின் பழந்தமிழ் இலக்கியங்களை அறிவு பூர்வமாக அணுக வேண்டும் என்ற முறையியலை முன்வைத்து தன் ஆய்வுகளின் வழி பயணித்து புதிய சிந்தனைகளின் உருவாக்கத்துக்கு மாணவர்களின் திசைகாட்டியாய் திகழ்ந்தவர்.
மாக்சிய அணுகு முறையில் இலக்கியங்களை கண்டடைதல் சமூகவியல் தளத்தில் அவற்றை வைத்துப் பார்த்தல் என இலக்கியப் பெறுமானங்களை மதிப்பிடலும் அவற்றை விளங்கிக் கொள்ளலும் என தமிழ் ஆய்வுலகை வழிப் படுத்தியவர் பேராசிரியர்.கா.சிவத்தம்பி அவர்கள்.
தமிழ் அரங்கின் தொன்மை அதன் செழுமை எனபன சங்க இலக்கியத்தின் பெரும் புதையல் என தன் ஆய்வுகளின் மூலம் உலக தொன்மை மிகு அரங்க மரபோடு இணைத்து ஆராய்வு ரீதியாக அணுகி தமிழ்நாடகத்தின் மூலத்தை அறிவியல் பூர்வமாக நிருபித்து நம் நாட்கங்கள் நடன முறைமைகள் அவற்றின் வழியாக தொடர்ந்த ஒரு பெரும் கலைப் பண்பாட்டை உலகறிய வைத்தவர் பேராசிரியர்.கா.சிவத்தம்பி அவர்கள்.
அவரது விரிவுரைகள் எப்போதும் சுவை மிகுந்ததாய் எத்தனை மணித்தியாலம் சென்றாலும் நேரம் போனதே தெரியாமல் நம்மை சிந்திக்க வைத்து அறிவார்ந்த தளத்தில் களி நடம் புரியச் செய்யும்.
இன்று அவரது பிறந்த நாளில் அவர் விட்டுச் சென்ற சிந்திப்பதற்கும் செயல்படுவதுக்குமான முற்போக்கு வழியிலான இலக்கிய வழிகாட்டல்களை என்றென்றுமாய்.
No comments:
Post a Comment