Friday, 26 May 2023

நூற்றாண்டு விழா பேராசிரியர்.சு.வித்தியானந்தன்


நூற்றாண்டு விழா 

பேராசிரியர்.சு.வித்தியானந்தன்

08.05.1924-08.052023

பேராசிரியர்.சு.வித்தியானந்தன் அவர்களின் பிறந்த நாள் இன்று.நூறாவது ஆண்டின் தொடக்கம்.

தமிழ்கூறும் நல்லுலகம் மகிழ்வுறுத்தி கொண்டாட வேண்டிய தமிழியல் ஆளுமையாளர் எங்கள் வித்தி.

தமிழ் ஆராய்ச்சி,தமிழ் கலைகள் பற்றிப் பேசுகின்றபோது வித்தியரை நினைவுறுத்தாமல் கடந்து போக முடியாது.

குறிப்பாக ஈழத்துக் கலைகளின் தனித்துவத்தை முதன் முதல் வெளியுலகுக்கு கொண்டு வந்தவர்களில் முதன்மையானவராக நாம் பேராசிரியர் வித்தியானந்தன் என்பதை மறந்து விட முடியாது.

தமிழகத்திலிருந்து வேறுபட்டு தனித்துவமான கலை மரபுகள் ஈழத் தமிழர்களுக்கு உண்டு என்பதையும் ஒரு சுயநிர்ணயமுள்ள தேசிய இனமாக ஈழத் தமிழர்கள் இறைமையுள்ளவர்கள் என்பதை அவர்களது கலை பாரம்பரியங்களின் தொடர்ச்சியை தொன்மையை கண்டுணர வழி சமைத்தவர் பேராசிரியர்.சு.வித்தியானந்தன் அவர்கள்.

ஈழத்தமிழர் இசை மரபு,நாடக மரபு,கூத்து மரபு என எல்லாவற்றிலும் செழுமையான தொடர்ச்சியை தனது செயல்பாடுகளால் நிருபித்து சென்றிருக்கிறார் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள்.

ஈழத் தமிழர்களின் தேசிய கலை எழுச்சி கூத்துக்களின் புத்துயிர்ப்பு,நாட்டார் கலைகளின் அறிமுகம் என்பன தொடர்பாக அவற்றை ஆவணப் படுத்துதலிலும் அழிக்கை முறைகளினூடு அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பதிலும் ஆய்வுலகில் விஞ்ஞான பூர்வமாக அறிவியல் மயப் படுத்துவதிலும் தன் காலத்தில் தமிழகத்துக்கும் முன்னோடியான செயல்பாடுகளின் மூலம் வழிகாட்டியவர் பேராசிரியர் சு .வித்தியானந்தன் அவர்கள்.

இன்று நாம் ஈழக் கூத்துகள் அதன் தொடர்ச்சி நீட்சி பற்றி பேசுகிறோம் என்றால் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் அடிச்சுவட்டின் வழியாக என்பதை மறந்து விட முடியாது.கூத்தின் பரவலாக்கம் என்பது வித்தியானந்தன் வழியாக வசப் பட்டது என்றால் அது மிகையாகாது.

மட்டக்களப்புக் கூத்துக்கள்,யாழ்ப்பாணக் கூத்துக்கள்,மன்னார் கூத்துக்கள்,முல்லைத்தீவுக் கூத்துக்கள் என எல்லாப் பிரதேச வழக்காறுகளையும் உள் வாங்கிச் செயல்பட்டவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள்.

இலங்கைக் கலைக்கழக தமிழ்ப் பிரிவுத் தலைவராக இருந்த போது அவர் மேற் கொண்ட கலைப் பணியும் பயணங்களும் ஈழத் தமிழர்களது கலை வரலாற்றில் மறுக்கப் பட முடியாதது.

உலகத் தமிழாராய்ச்சி மண்றத் இலங்கைக் கிளைத் தலைவராக அவர் இருந்த காலை நாடாத்திய பிராந்திய தமிழாராய்ச்சி மகாநாடுகள் தமிழ் ஆய்வுலகின் புதிய வாசல்களை திறந்து விட்டமையை நாம் மறந்து விட முடியாது.அது போலவே நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு அவர் பெயரைச் சொல்லி வரலாற்றில் வாழும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நீண்ட நாட்கள் பணியாற்றிய பெருமையும் பேராசிரியர்.சு.வித்தியானந்தனுக்கு உரியது. பல்கலைக்கழக வளர்ச்சியில் அவரது பங்கு மகத்தானது என நான் சொல்வேன் 

பேராசிரியர்.சு.வித்தியானந்தனின் நூற்றாண்டை உலக அளவில் கொண்டாடுவோம் வாருங்கள்கால 

No comments:

Post a Comment