Saturday, 3 September 2016

சீர் பூத்த தென் வெருகல்





வான் பொய்ப்பினும் தான் பொய்யா வெருகல் ஆறு நிரம்பி வழிந்து  தான் செல்லும் இடமெல்லாம் செல்வத்தை அள்ளி சொரியும் அழகு.தான் பாயுமிடமெங்கும் அழகையும் அழைத்துச் செல்லும்.வற்றாத ஜீவ நதி மாவலியின் கிளையாய் கழிமுகம் காணும் கங்கை மகள்.
எங்கு திரும்பினாலும் பசுமையாய் வயல்களும்  இணைந்திருக்கும் பசுமைப் பயிர்களும் கோயிலும் தீர்த்தமும் ஒன்றாயிருக்கும் குடிசார் அழகு.

கங்கையோரத்தில் கம்பீரமாய் நிமிர்ந்து நிக்கும் கோபுர கலசம் கலசத்தின் ஒளி தெறித்து பொன்னிறம் பரப்பும் நதியும் நாணலும்.மருத மரங்களிடை சூரியன் பட்டு தெறித்து வண்ணம் காட்டும் வடிவு இவையெல்லாம் வெருகலுக்கேயுரிய அழகு.

குன்றாய் நீண்டு செல்லும் மலைத் தொடர் வழியே நம் மூதாதையர்களின் சுவடுகளை சுமந்து கொண்டு அமைதியாய் அழகாய் தொன்மை வரலாற்று படிவுகளின் வழி கல்வெட்டுக்களாய்,கட்டிட அழிவுகளாய் எல்லாம் நம் இருப்பை சொல்லி நிற்கும் கம்பீரம்.

கதிர்காம யாத்திரைக் காலங்களிலும் திருவிழாக் காலங்களிலும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும் வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயம் இன்று என்றுமில்லாதவாறு இரு முனைகளிலிருந்தும் ஆட்கள் சாரி சாரியாக குவியத் தொடங்கினர்.ஏதோ முக்கிய நிகழ்வுக்கான ஆயத்தங்கள் நடை பெற்றுக் கொண்டிருந்தன.ஆலையத்தை சூழ உள்ள பகுதிகள் எங்கும் மகர தோரணங்கள் தொங்க விடப்பட்டு அலங்கரிக்கப் பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது வெருகல்.

அரசன் வரவிற்காய் காத்திருக்கும் முடிசூட்டு விழாப் போல கொட்டியாரத்தின் அரச பிரதானிகள்,கோயில் கங்காணங்கள் புலவர்கள் அறிஞர்கள் என பெரும் அவையினரின் வரவால் அள்ளுண்டு வந்த கலை கோயிலாய் காட்சியளித்தது வெருகல்.

ஏழுர் அடப்பன் மார்களும் தேசத்து மூத்தவர்களும்  வெருகலில் அலங்கரிக்கப் பட்டிருந்த சபா மண்டபத்தில் கூடியிருந்தனர்.கலைஞர்கள் கூட்டம் ,தம்பலகாமத்து ஆடல் மகளிர்,கொட்டியார தேசத்து கூத்தர்கள் என கலைக் கூடமாய் மாறியிருந்தது வெருகல்.
கண்டி விக்கிரமராசசிங்கனின் அரச பிரதானிகளும் அங்கு வருகை தந்திருந்தனர்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல் கொட்டியாரத்து வன்னிபம் இருமரபுய்ய வந்த இளஞ்சிங்கன் தன் படை பரிவாரங்களுடன் கைகளில் மாலையுடன் காத்திருக்க

அழகிய கொம்பன் யானைமேல் புலவர் வீரக்கோன் முதலியார் கையில் பெரும் ஏடு ஏந்தி மக்கள் புடை சூழ வாழ்த்துக்களுடன் வரவேற்று அழைத்து வர இளஞ்சிங்கன் புலவருக்கு மாலை அணிவித்து அரங்கேற்ற மேடைக்கு அழைத்து சென்று இருக்கையிட்டான்.

தம்பலகாமத்து புலவர் வீரக்கோன் முதலியார் தேசத்தார் அவையில் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் எனும் குறும் காவியத்தை படிக்க தொடங்கினார்.எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி .

"சீர்பூத்த தென்வெருகற் சித்திரவே லாயுதர்மேல்
ஏர்பூத்த செந்தமிழா லின்பரசக் காதல்சொல்ல 1

வார்பூத்த கும்பதன வல்லவைதன் பாகமுறுங்
கார்பூத்த மேனிக்க ணபதிதாள் காப்பாமே. 2

தென்னிலங்கை ராவணணைச் செய்யவிர லாலூன்றிப்
பின்னவன்ற னின்னிசையைப் பெட்புடனே கேட்டுவந்து

வாளுடன்வா ணாள்கொடுத்த மாகோணை நாயகர்தந்
தாளிணையெந் நாளுந்த மியேனுக் குத்துணையே. 4"

நூல் அரங்கேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது ஒவ்வரு கண்ணிக்கும் இளஞ்சிங்கனும் அவையோரும் கரகோசித்து மகிழ்ந்தனர்.

"செயய வெருகனகர்ச் சித்திரவே லாயுதர்மேல்
வைய மகிழு மதுரமொழிக் காதல்சொல்ல 5

மையனைய பூங்குழலாண் மாதுபிடியன்னநடை
ஐயைமலர்ப் பாதமதை யன்பாகப் போற்றிசெய்வாம். 6"

என தொடர புலவரின் கவியாற்றலை மனதுக்குள் வியந்து பலரும் பாராட்டிக் கொண்டிருந்தனர். கடவுள் காப்பிலிருந்து வாழ்த்தாய் மாறி இப்போ காதலாய் மலர்ந்த பகுதிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

"வேலரிடம் தூதாய் விரைந்தேதி யென்றுயரைச்
சாலமுடன் சொல்லுஞ் சமயம€தைக் கூறுவன்கேள் 368

என்போலும் பெண்களிசைந்தனுப்புந் தூதுவர்கள்
அன்புடனே பேசு மமையமதிற் சொல்லாதை. 369

இந்திரனுஞ் சந்திரனு மெண்ணிரிய விண்ணவரும்
வந்துதொழும் போதெனது மையறனைச் சொல்லாதை.

வீரவா கோடுமற்றும் வீரர்மற்றும் வீரர்தொழு தேத்துகின்ற
நேரமதி லென்மயலை நீயெடுத்துச் சொல்லாதை 371"

சித்திரவேலாயுதர் மேலான காதலை புலவர் தன் மொழியில் அழகாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்

"மெத்தபுகர் வாய்ந்த வெருகற்ப தியுறையுஞ்
சித்திரவே லாயுதரின் சீரடியி லன்புகொண்டு 372

மானமு டன்மிக்க வயனிலமுந் தோப்புகளும்
மானிய மாயீந்த மகராச ராசேந்திரன் 373

மாணிக்கம் வைத்திழைத்த வன்னப்ப தக்கமுடன்
பூணணிக ளீந்து புகழ்படைத்த பூபாலன் 374

கண்டிநக ராளுங் கனகமுடி ராசசிங்கன்
தெண்டனிடும் போதெனது சேதியைநீ சொல்லாதை. 375

சித்திரவே லாயுதவேள் சேர்ந்துமகிழ் வாயுறையுஞ்
சித்திரஞ்சே ராலயமுஞ் செம்பொற் சினகரமும் 376

திட்டமுடன் முன்னாளிற் செய்தநல்ல நாகனெனுஞ்
செட்டிவம்மி சத்திலுள்ள செய்யபிர தானிகள்போய் 377

பன்னரிய பாதம்ப ணிந்துதொழு சேத்துகையில்
என்னடைய சங்கதியை யெள்ளவுஞ் சொல்லாதை. 378"

வெருகலில் பணியும் கொடையும் அளித்தோரை புகழ்ந்தும் பாக்கள் கண்ணிகள் தொடர்ந்தன.

"துன்னு மிருமரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்
வன்னிமைபொற் பாதம் வணங்கையினீ சொல்லாதை 379

சாற்று நிலைமை தலைமையுடன மற்றுமுளார்
போற்றுகையி லென்மயலைப் பூங்கிளியே சொல்லாதை 380

வித்வசனர் பாமாலை மெல்லடியிற் சூட்டுகையிற்
சத்தியமா யென்மயலைச் சற்றுநீ சொல்லாதை. 381

எண்டிசையிற் பாலகரு மிப்புவியி லுள்ளவருந்
தெண்டனிடும் வேளையிலென் சேதிதனைச் சொல்லாதை. 382

வன்னிமைதே சத்தார்ம காநாடு தான்கூடி
மின்னுமெழின் மண்டபத்தில் வீற்றிரக்கும் வேளையிலே 383

கோதில்புகழ் சேர்வீரக் கோன்முதலி தானியற்றுங்
காதலரங் கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை"

புலவர் வீரக்கோன் முதலியார் தன் கண்ணிகளால் சித்திரவேலாயுதர் காதலை பாடி முடிக்க கரகோசம் வானை முட்டியது.தென்னன்மரபடி,திருகோணமலை,தம்பலகாமம்,கொட்டியாரம் என எல்லா பிரதேசத்தினரும் புலவரை வாழ்த்தினர்.மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார் புலவர்.

(படங்கள் நண்பர்,உறவினர் திருமலை சசிகுமார் நன்றிகள்)

No comments:

Post a Comment