Friday, 2 September 2016

ஒரு சேமணையனின் கதை

ஒரு சேமணையனின் கதை

எங்கள் சேனையூரில் சில சிறப்பான சொல் வழக்குகள் உள்ளன அதில் இதுவும் ஒன்று.சேமணையன் என்றால் ஒன்றும் தெரியாத முட்டாள் என்று அர்த்தப்படும்.இனி கதைக்கு வருவோம்.

ஒரு ஊர்ல ஒரு சரியான சேமணையன் ஒருவன் இருந்தானாம்.அவன் வேலைக்கு போறல்லயாம் தாய்க்காரி எங்கயாவது பிச்சி புடுங்கி ஆக்கிக் கொடுக்க சாப்பிட்டு விட்டு வீட்டு விறாந்தையில படுத்து தூங்குறதுதான் அவன் வேலையாம்.ஒரு செம்பு தண்ணி கூட தூக்க மாட்டானாம் அதுவும் அம்மாதான் எடுத்து கொடுக்கணுமாம்.

இப்படி இருந்து வாற காலத்தில தாய்க்காரிக்கு கோபம் வந்திச்சாம் படுத்துகிடந்தவன தட்டி எழுப்பி டேய் மகனே எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருக்கப் போறா எங்கயாவது வேலைக்கு போய் உழைச்சு வாடா என்ற கண்ணுக்கு பிறகு நீ சரியா கஸ்ரப் படப் போறா.என்று சொன்னாவாம்.அவன் கேக்கிற மாதிரி இல்லையாம்.

அவவும் விடாம ஒவ்வொரு நாளும் நச்சரித்துக் கொண்டே இருந்தாவாம்.அவட அரிகண்டம் தாங்க ஏலாம ஒரு நாள் விடிய சொன்னானாம் எனக்கு சோறு கட்டித்தா நான் வேல தேடப் போறன் ,என்று சொல்ல தாயும் நல்ல பச்சரிசியும் பச்சடியும் வைச்சு சோறு கட்டிக் கொடுக்க மம்பட்டி ஒன்ற எடுத்துக் கொண்டு ஒவ்வொரு இடமா வேல கேட்டுப் போனானாம் ஒருவரும் வேல கொடுக்கலையாம் இந்த சேமணையனுக்கு ஆர் வேல கொடுக்கிறது என்று சொல்லிற்று போய்ற்றாங்களாம்.

சரியான வெய்யில் கொழுத்தி எறியுதாம் ஊர தாண்டி போய்ற்றானாம்.நல்ல பசியும் வந்திற்றாம்  ஒரு மரத்துக்கு கீழ இருந்து தாய் கட்டிக் கொடுத்த சோத்து முடிச்ச அவிட்டு  நல்லா சாப்பிட்டானாம் நித்திர வந்திற்றாம் அபபடியே படுத்திற்றானாம்.படுத்திற்று எழும்பி பாத்தானாம் முன்னால ஒரு புத்தாம் புத்துக்கு மேல ஒரு கிழட்டு ஓணான் இருந்திச்சாம்.அது வெய்யிலுக்கு சீக்கா அடிச்சுதாம் ஓணானுக்கு வெய்யிலென்றால் நல்ல விருப்பம் அப்ப அது சந்தோசத்தில சீக்கா வலிக்கும் .அது இவனுக்கு கூப்பிடுற மாதிரி இருக்க ஓணானிட்ட எனக்கு வேல தருவியா என கேட்டானாம் அதுவும் ஓம் என்று தலையாட்டிச்சாம் ஓணான் எப்பவும் தலைய ஆட்டிக் கொண்டிருப்பது இவனுக்கு தெரியாது.திருப்பிக் கேட்டானாம் எங்க வேல இங்கயா என்றானாம் அதுக்கும் தலையாட்டிச்சாம்.இவனும் ஓ என்று தலயாட்டி இந்த இடத்த துப்பரவாக்கட்டா என்றானாம்  ஓணான் திரும்பியும் தலையாட்டிச்சாம்.சரி இண்டைக்கு பொழுது பட்டு போய்ற்று நாளைக்கு வாறன் எண்டு சொல்லிற்று வீட்ட வந்தானாம்.

வீட்ட வந்தவன் அம்மாட்ட எனக்கு ஒராள் வேல தந்திருக்கார் நான் நாளைக்கு நேரத்தோட வேலைக்கு போகணும் .விடிய சோறு கட்டித் தந்திரணும் என்று சொல்ல மனிசியும் சரியா சந்தோசப் பட்டு அடுத்த நாள் நல்ல பெரிய சோத்து முடிச்சா கட்டிக் கொடுத்தாவாம்.அவனும் விடிஞ்சதும் அந்த இடத்துக்கு போய் வெட்டி வெழியாக்கினானாம்.அந்த வழியால போன ஆக்களெல்லாம் சேமணையனுக்கு விசர் புடிச்சிற்று போல என சொல்லிப் போனாங்களாம்.

அவனும் மாடு மாதிரி வேல செய்தானாம்.புத்துக்குள்ள இருந்து ஓணான் வந்திச்சாம் இவன் கேட்டானாம் சம்பளம் எப்ப இண்டைக்கு இல்லையா பிறகா என்ற ஓணான் தலையாட்டிச்சாம் இவனும் ஓ எண்டு சொல்லிற்று போய்ற்றானாம்.இப்படி ஒரு மாதம் போய்ற்றாம் .தாய்க்காரி என்னடா சம்பளம் கிடைக்கலையா எண்டு கேப்பாவாம் இவனும் பிறகு  பிறகு எண்டு சொல்லித் திரிய ஆக்களும் இவன் பகிடி பண்ண  தொடங்கினாங்களாம் என்னடா உனக்கு எப்ப சம்பளம் இவன் சொல்வானாம் முதலாளி பிறகு தாறன் எண்டு சொன்னவர். எப்படா  நீயும் உண்ட வேலையும் சரியான முட்டாள் உனக்கு சம்பளமும் கிடைக்காது ஒண்ணும் கிடைக்காது எண்டு ஆக்கள் எல்லாம்  சொல்ல இவனுக்கு கோபம் வந்திச்சாம்.

இதுக்கிடையில அந்த இடம் முழுவதையும் இவன் நல்லா துப்பரவாக்கியிருந்தானாம் அந்த இடம் பயிர் செய்யக் கூடிய அளவுக்கு சுத்தமா இருந்திச்சாம்.

கோபம் வந்த இவன் அந்த இடத்துக்கு போனானாம். அங்க ஓணான் புத்துக்கு மேல இருக்கேராம் எப்ப சம்பளம் என கேட்டானாம் ஓணான் மேல் கீழா தலைய ஆட்டிச்சாம் .ஓ இந்த புத்துக்குள்ளயா எண்டு கேட்டிற்று புத்த வெட்டத் தொடங்கினானாம்.வெட்டிக் கழைச்சு போன நேரத்தில நங் என்றொரு சத்தம் கேட்டிச்சாம் அங்க பாத்தா ஒரு பானைக்குள்ள அவ்வளவும் தங்க காசுகளாம்.அத தூக்கிற்று எனக்கு சம்பளம் கிடைச்சிற்று என்ற் சத்தம் போட்டுக்கொண்டு தாய்ற்ற போய் குடுத்தானாம்.
பிறகு?
தாயும் மகனும் சந்தோசமா வாழ்ந்தாங்களாம்


No comments:

Post a Comment